கைதி கண்டுபிடித்த `பிரஷ்’
கண்டுபிடிப்புகள் எல்லாம் பெரும்பாலும் ஒரு தற்காலிக நிகழ்வால் ஏற்பட்டவையாக இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.
நாம் பல்துலக்கும் பிரஷ்சை உருவாக்கியவர் ஒரு சிறைக்கைதி. அவரது பெயர் வில்லியம் ஆட்டிஸ். இங்கிலாந்தை சேர்ந்த இவர் 1770-ம் ஆண்டில் கலகத்தை தூண்டியதாக சிறையில் அடைக்கப்பட்டார்.
வித்தியாசமாக சிந்திக்கும் குணம் உடையவர் ஆட்டிஸ். ஒரு நாள் அப்போதைய வழக்கப்படி துண்டுத் துணியால் பல் தேய்த்தார். அப்போது அவருக்குள் ஒரு எண்ணம் உதித்தது. உடனே அன்றைய தினம் சாப்பாட்டுக்கு கொடுக்கப்பட்டதில் இருந்து ஒரு எலும்பு துண்டை தனியாக எடுத்து வைத்துக்கொண்டார். அவர் தனது எண்ணத்தை வெளிப்படுத்தவே, காவலாளி ஒருவர் மிருகத்தின் ரோமங்களை கொடுத்து உதவினார். அந்த ரோமங்களை சிறு சிறு குச்சங்களாக சேர்த்து கட்டினார் ஆட்டிஸ். பின்னர் எலும்புத் துண்டில் துளை போட்டு ரோம குச்சங்களை நிறுத்தி வைத்தார். இவ்வாறுதான் பல்துலக்கும் பிரஷ் உருவானது.







